இலங்கை மின்சார சபைக்கு 130 பில்லியன் ரூபா நட்டம் 

நிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை முயல்வதாகக் குற்றச்சாட்டு

by Staff Writer 30-11-2019 | 9:43 PM
Colombo (News 1st) முன்னர் நிராகரிக்கப்பட்ட அவசர மின்சார கொள்வனவிற்கான உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை முயற்சிப்பதாக மின் பாவனையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மிதக்கும் களஞ்சியத்திலிருந்து 800 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக, மின்சார பற்றாக்குறை நிலவுவதாக திரிவுபடுத்தப்பட்ட தகவலை மின்சார சபை பரப்புவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சார சபையின் முன்னாள் தலைவர் ரகித ஜயவர்தனவின் கையொப்பத்துடன் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி, அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 2020 ஆம் ஆண்டில் மின் பற்றாக்குறை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக 800 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால அடிப்படையில் கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. காலி துறைமுகத்தில் ஸ்தாபிக்கப்படும் மிதக்கும் களஞ்சியத்திலிருந்து 200 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் யோசனை 2.கொழும்பு துறைமுகத்தில் ஸ்தாபிக்கப்படும் மிதக்கும் களஞ்சியத்திலிருந்து 300 மெகாவாட் மின்சாரத்தை 30 மாதங்களுக்கு கொள்வனவு செய்தல் 3. ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருட காலத்திற்காக 200 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்தல் 4. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்தாபிக்கப்படும் மிதக்கும் களஞ்சியத்தில் இருந்து 100 மெகாவாட் வீதம் 30 மாதங்களுக்கு கொள்வனவு செய்தல் ஆகிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது மற்றும் மூன்றாவது யோசனைகளை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளதாகவும், இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை கடந்த வருடத்தில் தமது நீண்டகால திட்டத்தில் உள்ளடக்கிய எந்தவொரு மின்சக்தி நிலையத்தையும் அமைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கணக்காய்வாளர் கோப் குழுவிற்கு அறிக்கையிட்டிருந்தார். குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக, திரிவுபடுத்தப்பட்ட மின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டுவதற்கு பொறியியலாளர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்குவதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இலங்கை மின்சார சபை 130 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.