வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது: பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது: பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2019 | 8:27 pm

Colombo (News 1st) பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று கண்டிக்கு சென்றிருந்தார்.

பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு செயலாளர் பதிலளித்தார்.

கேள்வி: நாட்டில் தற்போது ஒரு சர்ச்சை நிலவுகின்றது. வடக்கில் வீரர் அனுஷ்டிப்பிற்கு அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையிலும் சில இடங்களில் வீரர் அனுஷ்டிப்பு நடைபெற்றுள்ளது.

பதில்: அரசாங்கம் என்ற வகையில் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. கடந்த ஆட்சியிலும் அவை அனைத்திற்கும் இடமளிக்கப்பட்டன. எமது அரசாங்கம் வந்தவுடன் முழுமையாக ஒழிக்கச்சென்றால் அது சிறந்ததாக அமையாது. அது தொடர்பான நடவடிக்கையை எதிர்வரும் காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

பதில்: அங்கு சட்டத்தை மீறும் செயல் இடம்பெறவில்லை. அங்கு எவ்வித குழப்பமும் இல்லை. அவர்கள் மாவீரர் தினம் எனக்கூறும் தினத்தில் அனுஷ்டிப்பு மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

கேள்வி: ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

பதில்: அவ்வாறு செயற்பட்டால் சிறந்தது. வடக்கு மக்களுக்கு பாரிய சேவையை நாம் ஆற்ற வேண்டியுள்ளது. தமது பகுதி மக்கள் குறித்து செயற்படுவதற்கு பிரதேச அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினால் அது சிறந்ததாக அமையும் என நான் கருதுகின்றேன்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளில் முக்கியமான காணிகளை மீள வழங்குதல் மற்றும் இராணுவ முகாம்களை நீக்குதல் ஆகியன தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது. நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான இடங்களில் இராணுவ முகாம்கள் காணப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆகவே, எவரேனும் கூறுகிறார்கள் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பின்தள்ளி, எவருடைய கோரிக்கைக்காகவும் இராணுவத்தை வௌியேற்றுவதோ, இராணுவ முகாம் அகற்றப்படுவதோ இடம்பெறாது. இராணுவ முகாம் காணப்படுகின்றது என்பதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது. இன, மத, வர்க்க பேதம் எம்மிடமில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே என அனைவரையும் பாகுபாடின்றி நடத்துவோம். பௌத்தம் இந்து, கிறிஸ்தவம் என்ற பேதமின்றி அனைவருக்கும் எம்மால் வழங்கப்பட வேண்டிய சேவையை நிறைவேற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

கேள்வி: வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத்தலங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவை அழிவடைவதாகவும் மகா சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பீர்கள்?

பதில்: எமது நாடு முழுவதும் எந்த மதத்தினது, எந்த இனத்தினது வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும். அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்