நாடளாவிய ரீதியில் கடும் மழை: மட்டக்களப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் கடும் மழை: மட்டக்களப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2019 | 9:28 pm

Colombo (News 1st) வடக்கு, வட மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலையை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பலத்த மழையுடனான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – நாவற்குடா பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, சித்தாண்டி – ஈரளக்குளத்திற்கான தரைவழிப் போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஈரளக்குளம் கிராமத்திற்குள்ளும் தற்போது ஆற்று நீர் பிரவேசித்துள்ளது.

சுமார் 8 கிலோமீட்டர் வரை ஆற்று நீர் உட்புகுந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்த ஆற்றைக் கடந்து நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்கின்ற நிலையில், தற்காலிகமான படகுச் சேவையொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் சித்தாண்டியின் நான்கு கிராம சேவகர் பிரிவில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சந்துவௌி ஆறு பெருக்கெடுத்தமையினால், சந்துவௌி கிராமத்திற்குள் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு வௌ்ள நீர் உட்பிரவேசித்துள்ளது.

இதேவேளை, முறக்கொட்டாஞ்சேனை ஆறு பெருக்கெடுத்தமையினால் 125-இற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரமாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளனர்.

திருகோணமலையிலும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகின்றது.

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, ஹல்தும்முல்லை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூனாகலை – அம்பிட்டிகந்த தோட்டத்தில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிந்து குடியிருப்பொன்றின் மீது வீழ்ந்துள்ளதுடன், மூன்று பேர் அதனுள் சிக்கினர். தோட்ட மக்கள் இணைந்து பாதுகாப்பாக அவர்களைக் காப்பாற்றியுள்ளதுடன், அனர்த்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குடியிருப்பிற்குள் சிறுவர்கள் உட்பட 15 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஹல்தும்முல்லை பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் இணைந்து மக்களை பாதுகாப்பான இடமொன்றுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டது.

தோட்டத்திலுள்ள 28 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேரை, மாகந்த தேயிலைத் தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்