இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் சலுகைக் கடன்

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் சலுகைக் கடன் வழங்கியது இந்தியா

by Staff Writer 29-11-2019 | 8:04 PM
Colombo (News 1st) 400 மில்லியன் டொலர் சலுகைக் கடனை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். பயங்கரவாதத்தை தடுக்கும் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டொலரும் அதில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் புது டெல்லி நகரில் நடைபெற்ற சந்திப்பில் பாரத பிரதமர் கூறினார். இரு நாட்டு தலைவர்களதும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர், புது டெல்லியில் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. தமது அரசாங்கத்தின் 'அயலவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கு அமையவும் சமுத்திர கோட்பாட்டிற்கு அமையவும் இலங்கையுடனான தொடர்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக இதன்போது நரேந்திர மோடி கூறினார். சமவுரிமை, நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகிய விடயங்களுக்காக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளை பின்பற்றும் என தாம் நம்புவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் நல்லிணக்க செயற்பாடுகளில் உள்ளடங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட இலங்கை முழுவதுமான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியா நம்பிக்கையான பங்காளராக இருக்கும் எனவும் மோடி உறுதியளித்துள்ளார். இதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடியதாகவும் இந்தியாவிற்கு சொந்தமான படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதலாவது அரச தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை நாட்டிற்கு வருகை தருமாறு தாம் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.