by Staff Writer 29-11-2019 | 4:11 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகள் தொடர்பான தகவல்களை பெற்றுத்தருமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமரவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யானைகளினால் மனிதர்களுக்கும் மனிதர்களினால் யானைகளுக்கும் இடையில் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளில் யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், தேவையான தகவல்கள் கிடைத்த பின்னர் செயலற்ற வகையில் காணப்படும் யானை வேலிகள் உள்ள பகுதிகளை இனங்கண்டு உடனடி தீர்வுகளை வழங்க தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமரவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதுடன் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு சூழலியலாளர்கள் மற்றும் விசேட நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல்களினால் வருடாந்தம் 30 வீத பயிர்செய்கை அழிவடைவதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பொருளாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.