சுவிஸ் குமார் விடுவிக்கப்பட்ட வழக்கு: குற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க

சுவிஸ் குமார் விடுவிக்கப்பட்ட வழக்கு: குற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க

சுவிஸ் குமார் விடுவிக்கப்பட்ட வழக்கு: குற்றச்சாட்டை நிராகரித்தார் லலித் அநுருத்த ஜயசிங்க

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2019 | 4:42 pm

Colombo (News 1st) யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க நிராகரித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இன்று விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மன்றில் இன்று ஆஜராகினார்.

பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி மகேஸ் கொட்டுவலவும் மனுதாரர்கள் சார்பில் அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

பிரதிவாதிகள் மீதான குற்றப்பத்திரம் இன்று வாசிக்கப்பட்டது.

2015 மே மாதம் 18 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் வித்தியா சிவலோகநாதன் என்பவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் பொலிஸ் தடுப்பிலிருந்து வௌியேற உதவியமையானது, தண்டனை சட்டக்கோவையின் 209 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என நீதிமன்றம் அறிவித்தது.

எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த பிரதிவாதி தான் நிரபராதி என மன்றுக்கு இன்று அறிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு தொடுநரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில இதுவரை தமது தரப்பிற்கு கிடைக்கவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை விசாரணை செய்த பிரதான புலனாய்வு அதிகாரியான நிஷாந்த டி சில்வா தற்போது நாட்டில் இல்லாமையால் அது குறித்து சட்ட மா அதிபருடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

அதற்கமைய, வழக்கின் விளக்கத்தை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்