ரணில், சஜித்துடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக மனோ தெரிவிப்பு

by Bella Dalima 28-11-2019 | 6:38 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் தனித்தனியாக இன்று சந்தித்தனர். இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு இணைப்பாளர்களாக தாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ளதாக கட்சித்தலைவர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்தனர். ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோர் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கட்சித் தலைமையகத்திற்கு சென்றனர். ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ராஜித சேனாரத்ன மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காமல் கட்சித் தலைமையகத்திலிருந்து வௌியேறினர். இதேவேளை, கட்சிகளின் தலைவர்கள் இன்று முற்பகல் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடினர். பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் நாளை மீண்டும் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார். எனினும், இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு அல்லது பேசப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்காதிருப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கியதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.