சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் ; CID விசாரணை

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி விவகாரம் தொடர்பில் CID விசாரணை

by Staff Writer 28-11-2019 | 8:07 AM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவரை பலவந்தமாக தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விரைவானதும் முழுமையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சினால் நேற்று (27) கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தூதரகத்தின் தகவல்களை வௌியிடுமாறு அடையாளந்தெரியாத சிலர் தமது உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது இராஜதந்திர பிரதிநிதி மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட பாரிய மற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதலாக இதனைக் கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தமது தூதரகத்தின் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரியுள்ளது. குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.