எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம்

by Staff Writer 28-11-2019 | 9:55 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி, ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று (27) மாலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக் கடிதம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 57 பேரின் கையொப்பத்துடன் கிடைத்த கடிதத்தின் பிரதியையும் அவருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, எதிர்க்கட்சியில் பிரதானமாக இருக்கக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறும் சபாநாயகர் கோரியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் தற்போது நிலவுவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்குமாறும் சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன்பின்னர் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது சபாநாயகரால் எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.