ஹொங்கொங் விவகாரம்:சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து

ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டமூலத்தில் ட்ரம்ப் கெயெழுத்து

by Staff Writer 28-11-2019 | 1:46 PM
Colombo (News 1st) ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவுடனான சிறப்பு அந்தஸ்த்தை நியாயப்படுத்துவதற்கான போதுமான சுயாட்சி அதிகாரம் ஹொங்கொங்கிற்கு உள்ளதா என்பதை வருடாந்தம் மீளாய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையை குறித்த மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான சட்டமூலம் வலியுறுத்துகின்றது. சீனாவின் எதிர்ப்பை மீறி இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஹொங்கொங் மக்களுக்காக இதனை தாம் புரிந்ததாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அமெரிக்காவின் தவறான நோக்கங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சீன வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த சட்டமூலம் தவறான சமிக்ஞையை வழங்கும் என்பதுடன் நிலைமையைக் கட்டுப்படுத்த உதவாது என ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குறித்த சட்டமூலம் குறிப்பிடத்தக்கதொரு வெற்றி என ஹொங்கொங் ஜனநாயக சார்பு இயக்கமொன்றின் தலைவர் கூறியுள்ளார்.