ஜனாதிபதியின் பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது

ஜனாதிபதியின் பெயரை தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

by Staff Writer 28-11-2019 | 4:07 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரை பயன்படுத்தி, மக்களை தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சில மோசடிக்காரர்கள் மற்றும் குழுவினர் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாகக் கூறி மக்களை தவறாக பயன்படுத்தி இலாபமீட்ட முயற்சிக்கின்றமை தொடர்பில் சாட்சியங்களூடாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பல்வேறு பதவிகள், நியமனங்கள் மற்றும் விலைமனுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்களிடம் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. சிலர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கான இயலுமை தனக்கு உள்ளதாகவும் மக்களிடம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு தகவல் பதிவாகியுள்ளது. நிலையான மற்றும் அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு அமைய செயற்படுவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கொள்கையாகும். இதற்கு அப்பால் பதவி, நியமனம், விலைமனு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலாபமடைய ஜனாதிபதியிடம் முயற்சிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான நபர்களின் வார்த்தைகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.