புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

வழங்கப்பட்ட பதவிகள் வரப்பிரசாதம் அல்ல, பொறுப்பு வாய்ந்தவை - ஜனாதிபதி

by Staff Writer 27-11-2019 | 1:29 PM
Colombo (News 1st) கிடைத்துள்ள பொறுப்பினை நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு வெற்றி பெறுவதற்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்று பதவியேற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் வரப்பிரசாதம் அல்ல, அவை பொறுப்பு வாய்ந்தவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய ஜனாதிபதி, மக்கள் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியிலேயே ஆணையை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிக காலம் சேவையாற்றிய அரசியல்வாதிகள், அதேபோன்று அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்த அனைவருக்கும் இந்த பொறுப்புகளை வழங்குவதற்குத் தம்மால் இயலாது எனவும் அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை, அமைச்சர்களின் எண்ணிக்கை போன்று குறைப்பதற்கு விருப்பம் இருந்தபோதிலும், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் பாரிய பொறுப்புகள் உள்ளமையால் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். கிடைத்துள்ள பதவிகள் குறித்து சந்தேகம் எழுந்திருந்தாலும் அதில் பாரிய பொறுப்புள்ளதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனடிப்படையிலேயே இராஜாங்க அமைச்சு பதவிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக தான் கண்காணித்ததன் பிரகாரம், பல பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இராஜாங்க அமைச்சு பதவிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இராஜாங்க அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் சேவையாற்றுவதற்கு அமைச்சர்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார்.