யுத்தத்தில் உயிர் நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்

by Staff Writer 27-11-2019 | 9:01 PM
Colombo (News 1st) யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. முல்லைத்தீவு - முள்ளியவளையில் இன்று மாலை 6.05-க்கு பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதிகளவிலானவர்கள் வருகை தந்து உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையில் இன்று மாலை நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் அதிகளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். முல்லைத்தீவு - துணுக்காய், ஐயன்குளம் பகுதியிலும் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னார் - ஆட்காட்டிவெளியிலும் மாவீரர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. வவுனியா நகர மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது. யாழ். தீவகம் - சாட்டியிலும், கிளிநொச்சி - கனகபுரத்திலும் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, மாவடி முன்மாரியிலும் இன்று உயிர் நீத்த உறவுகள் நினைவுகூரப்பட்டனர். திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்திவரும் இடத்திலும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று எவ்வித நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் கே.கந்தசாமி அறிவிருத்திருந்த நிலையில், இன்று முற்பகல் பல்கலைக்கழக நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் சேர்ந்து மாணவர்கள் இன்று மாவீரர் தின நினைவேந்தலை நடத்தினர். நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலயத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. உயிர் நீத்தவர்களின் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.