by Staff Writer 26-11-2019 | 8:56 PM
Colombo (News 1st) PE+ வர்த்தகக் குறியீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமாக உற்பத்திகளை மேற்கொண்ட வர்த்தக நிறுவனமொன்றுக்கு எதிராக இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இரத்தினபுரி மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமது நிறுவனத்தின் வர்த்தகக் குறியீட்டை போலியான முறையில் பின்பற்றி வேறொரு நிறுவனம் Tiles மற்றும் இரும்பு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற டயமன்ட் மற்றும் கட்டிங் டிஸ்க்களை மொத்தமாக விற்பனை செய்வதாக தெரிவித்து PE+ தனியார் நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
குறித்த நிறுவனம் மக்களை தவறாக வழிநடத்தி புலன் சொத்துச்சட்டத்தின் சரத்துக்களை மீறியுள்ளதாக PE+ நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த நடவடிக்கை அநீதியான முறையில் வணிகப் போட்டியை நடத்திச்செல்வதாக அமைந்துள்ளதெனவும் அதன் மூலம் புலன் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் PE+ வர்த்தகக் குறியீட்டிற்கான சட்ட உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதன்போது, அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்த மேலதிக நீதவான் துலான் வீரவர்தன, போலி உற்பத்திகளை நீதிமன்றக் கண்காணிப்பில் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அபராதம் புலன் சொத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கக்கூடிய அதிகபட்ச அபராதமாகும்.
இதேவேளை, Asterisks - The secret of the magic potion திரைப்படத்தை இலங்கையில் ஔிபரப்புவதற்கான உரிமையுள்ள M Entertainments தனியார் நிறுவனம் சுயாதீனத் தொலைக்காட்சிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு மற்றும் 300 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்தது.
M Entertainments தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான Julius & Creasy சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தமது தரப்பு நிறுவனத்தின் உரிமைகளை மீறும் வகையில், 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி குறித்த திரைப்படத்தை சிங்கள மொழியில் மாற்றி சுயாதீன தொலைக்காட்சி ஔிபரப்பியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
சட்டத்தரணிகளின் விளக்கத்தை ஆராய்ந்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்ஹ சுயாதீனத் தொலைக்காட்சி அதிகாரிகளை டிசம்பர் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.