நாலக்க கொடஹேவாவிற்கு எதிரான விசாரணை பெப்ரவரியில்

நாலக்க கொடஹேவாவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகளை பெப்ரவரியில் ஆரம்பிக்குமாறு உத்தரவு

by Staff Writer 26-11-2019 | 4:26 PM
Colombo (News 1st) பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "இளைஞர்களுக்கான நாளை" என்ற அமைப்பிற்காக அனுமதி வழங்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியை சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் "இளைஞர்களுக்கான நாளை" அமைப்பின் விளையாட்டு பிரிவின் பணிப்பாளர் டொனி இப்ராஹிம் ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.