.webp)
நேர்காணலின் ஒரு பகுதி
கேள்வி: இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற ரீதியில் நீங்கள் முன்னுரிமை வழங்கும் விடயங்கள் என்ன? பதில்: நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் முதலாவது விடயம். இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் சில விடயங்களை நான் மீளவும் சரி செய்ய வேண்டும். அடுத்ததாக பொருளாதாரம். இந்த தருணத்தில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்துடன், மேம்படுத்த வேண்டிய சில விடயங்களை நான் இனங்கண்டுள்ளேன். பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என்பது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயங்களாகும். கேள்வி: கடந்த 5 வருடங்களில் இந்த பிரிவுகள் ஏதேனும் ஒரு வகையில் வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போது நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? பதில்: கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கவில்லை. பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் தவறாகப் புரிந்திருந்தனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நாட்டிற்குள் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தேவையான முதல் விடயமாகும். தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீடுகளை செய்ய தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பல்வேறு நிறுவனங்களுள்ளன. SIS அரச புலனாய்வு சேவை ஊடாக இவை செயற்படுத்தப்படுகின்றன. இராணுவ புலனாய்வுப் பிரிவு, இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகம், கடற்படை புலனாய்வுப் பிரிவு மற்றும் விமானப் படை புலனாய்வுப் பிரிவு. இதில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அனுபவம் வாய்ந்த புலனாய்வுப் பிரிவாகும். எனினும், கடந்த அரசாங்கம் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. அதனால் தகவல்களை சேகரிப்பதற்கு புலனாய்வுப் பிரிவை நாடவில்லை. CID, TID அல்லது SIS ஊடாகவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது முன்னெடுக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக இந்த நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன.