கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகள் தொடர்பில் ரணிலும் கருவும் கலந்துரையாடல்

by Staff Writer 26-11-2019 | 8:21 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் குறித்து எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் இன்று மாலை சந்திப்பொன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சிக்கல் நிலை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் இன்றும் கருத்துக்களை வெளியிட்டனர். முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இன்று தமது பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.
சற்றுமுன் ஐ.தே.க தரப்பிலிருந்து வந்த செய்தி. ரணில் ஐ.தே.க தலைமையிலிருந்து விலக உடன்பட்டுள்ளார். ஐ.தே.க/ஐ.தே.மு தலைவராக சஜித், பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவார். இது தொடர்பில் ஐ.தே.க/ஐ.தே.மு கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலும் முடிவு செய்யப்படும்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கூறினார். இந்த நிலையில், கட்சியில் எழுந்துள்ள நிலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.
இந்த சந்தர்ப்பம் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டும் ஒன்றல்ல. அவ்வாறு நாங்கள் சுட்டிக்காட்ட முயன்றால் அனைவரை நோக்கியும் விரல்கள் நீட்டப்படலாம். அரசியல் ரீதியாக நாம் இந்த சந்தர்ப்பத்தில் சத்தமிடாமல் பல விடயங்களை செய்து வருகிறோம். காரணம் இந்த சந்தர்ப்பத்தில் நாடு குறித்து சிந்தித்து, முன்னோக்கி செல்ல வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் சஜித்தாக இருக்கலாம், கரு ஜயசூரியவாக இருக்கலாம், சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்தும பண்டார அனைவரும் இணைந்து எம்மை நம்பி வாக்களித்த 55 இலட்சம் அப்பாவி மக்கள் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.