by Bella Dalima 26-11-2019 | 3:54 PM
Colombo (News 1st) மாலியில் ஜிகாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பிரான்ஸின் 13 படை வீரர்கள் உயரிழந்துள்ளனர்.
நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில், மாலியின் வடக்கில் பெரும் பகுதியை இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றியதையடுத்து, அவர்களுக்கு எதிராகப் போரிட பிரான்ஸ் ஆயிரக்கணக்கான தனது படை வீரர்களை மாலிக்கு அனுப்பி வைத்தது.
பிரான்ஸின் உதவியுடன் மாலி தனது எல்லைப் பகுதிகளை மீட்டெடுத்தாலும், அங்கு பாதுகாப்பின்மையும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான போராட்டத்திற்காக மாலி, மவுரித்தேனியா, நைஜர், புர்கினா ஃபசோ மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு பிரான்ஸ் தனது 4,500 படை வீரர்களை களத்தில் இறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.