அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

by Staff Writer 24-11-2019 | 3:05 PM
Colomb (News 1st) வீழ்ச்சியடைந்துள்ள தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ. ரஞ்சித் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த போகத்தின்போது ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அறுவடை மிகக் குறைவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அறுவடையினூடாக கிடைத்த அரிசியும் உரிய விலைக்கு கொள்வனவு செய்யப்படாமையால் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் நட்டமடைந்ததாகவும் பீ.ரஞ்சித் கூறியுள்ளார். தமது தொழிலை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் பாரிய அளவில் கடனை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினூடாக வங்கிகளின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டமையால், தமது அங்கத்தினர் மேலும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அரிசி உற்பத்தியிலிருந்து சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் விலகியமையால் நுகர்வோருக்கு அதிக விலையில் அரிசியை விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்பி அரிசி ஆலை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.