பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயனக் கலப்பு

தமிழகத்தில் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயனக் கலப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

by Bella Dalima 23-11-2019 | 4:34 PM
Colombo (News 1st) தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் இரசாயனக் கூறுகளின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே பதிலளித்துள்ளார். இதன்போது, தமிழகம் ,கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில் Aflatoxin M1 என்ற இரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88 மாதிரிகளில் இந்த இரசாயனத்தின் அளவு அதிகமாக உள்ளமை தெரிய வந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோன்று, கேரளாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 37 மாதிரிகளில் இரசாயனத்தின் அளவு அதிகமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.