சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூடியது: விஜித் விஜயமுனி சொய்சா கால அவகாசம் கோரியுள்ளார்

by Staff Writer 23-11-2019 | 8:04 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கட்சித் தலைமையகத்தில் இன்று மீண்டும் கூடியது. ஒழுக்காற்று விசாரணைக்குழுவிற்கு விஜித் விஜயமுனி சொய்சா இன்று அழைக்கப்பட்டிருந்தார். எனினும், விஜித் விஜயமுனி சொய்சா ஒழுக்காற்றுக் குழுவிற்கு வருகை தரவில்லை. அவரின் சட்டத்தரணி ஊடாக விடயங்களை முன்வைத்திருந்தார். கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பக்கசார்பாக செயற்பட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் விஜித் விஜயமுனி சொய்சா மீது சுமத்தப்பட்டுள்ளன. இன்றைய விசாரணையின் போது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கால அவகாசம் கோரியதாக விஜித் விஜயமுனி சொய்சாவின் சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரண தெரிவித்தார். மேலும், விஜித் விஜயமுனி சொய்சா மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக சட்டத்தரணி கூறினார். இதேவேளை, கடந்த மாதம் 5 ஆம் திகதி கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு முன்னிலையில், எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், சட்டத்தரணிகள் ஊடாகவே ஒழுக்காற்றுக்குழுவிற்கு அவர்கள் விடயங்களை அறிவித்திருந்தனர். அத்துடன், ஏ.எச்.எம்.பௌசி மீதும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்