கொழும்பில் வளிமண்டல தூசு மீண்டும் அதிகரிப்பு

கொழும்பில் வளிமண்டல தூசு மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 23-11-2019 | 3:46 PM
Colombo (News 1st) ​கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் இன்று காலை 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த நிலை காணப்படுவதாக அவர் கூறினார். எதிர்வரும் ஒரு மாதத்திற்கு இந்த நிலை தொடரும் எனவும் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார். வானிலை மாற்றம் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி அதிகரிப்பதால் சுவாச நோயாளர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுவாச நோயாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி கூறினார். இதனை தவிர, வயதானவர்கள், சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். சுவாசிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை சந்திப்பது சிறந்தது எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.