களனி கங்கையின் நீர் மாசு அதிகரிக்கும் அபாயம் 

களனி கங்கையின் நீர் மாசு அதிகரிக்கும் அபாயம் 

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2019 | 8:56 pm

Colombo (News 1st) களனி கங்கையின் நீர் அதிகளவில் மாசடையும் அபாயம் நிலவுவதாக ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இரண்டாவது நீளமான கங்கை மற்றும் நான்காவது பாரிய நீர் வளமான களனி கங்கையிலிருந்து மேல் மாகாண சனத்தொகையில் சுமார் 80 வீதமான மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர்.

களனி கங்கையை சூழவுள்ள 10,500-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தொழிற்சாலைகள் மற்றும் உள்ளக நடவடிக்கைகள் காரணமாக களனி கங்கையின் நீர் மாசடையும் வேகம் அதிகரித்துள்ளதாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கங்கையின் இரு பக்கமும் அனுமதியற்ற கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால், கங்கையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டல் மற்றும் அனுமதியற்ற வீடுகளிலிருந்து வௌியேற்றப்படும் கழிவுகள், மனிதக்கழிவுகள் மற்றும் அசுத்தமான நீர் கங்கையில் கலப்பது மாசடைவிற்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையின் நீர் மாசடைவதற்கு அதிகக் காரணம் தொழிற்துறைகள் என்பதுடன், களனி கங்கையில் இரண்டு பிரதான வௌியேற்ற வலயங்கள் காணப்படுகின்றன. சீதாவாக்கை மற்றும் பியகம வௌியேற்ற வலயங்களே அவையாகும்.

சீதாவாக்கை வௌியேற்ற வலயத்தின் சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் 8 வருடங்களாக புனரமைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வலயத்தில் 37 தொழிற்சாலைகளின் அசுத்தமான நீர் சுத்திகரிப்பிற்கான பொது நீர் சுத்திகரிப்பு மத்திய நிலைய கட்டமைப்புகள் குறைவாகவுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன், அசுத்தமான நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்தின் நுண்ணுயிர் அழிப்பு இயந்திரமும் செயலிழந்துள்ளது.

தொழிற்சாலைகளால் வௌியேற்றப்படும் அசுத்தமான நீரை அகற்றுவதற்கு உரிய முறைமை இல்லை என்ற விடயமும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வலயங்களில் சில தொழிற்சாலைகளிலிருந்து வௌியேற்றப்படும் அசுத்தமான நீர் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு உட்பட்டவை அல்லவென்பதும் தெரியவந்துள்ளது.

நீரில் காணப்பட வேண்டிய Coliform-இன் அளவு 10,000 என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அது 8,90,000 ஐயும் விட அதிகம் என்பது பியகம வௌியேற்ற வலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீதாவாக்கையிலிருந்து கொலன்னாவை பாலம் வரையிலுள்ள களனி கங்கையின் நீர் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ அல்லது கேளிக்கை நடவடிக்கைகளுக்கோ உகந்தது அல்லவென்பதும் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கங்கையின் நீர் மாசு அதிகரித்துள்ள நிலையில், அம்பத்தளை மற்றும் பட்டவில நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் திரவங்களுக்கான செலவும் அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டில் இதற்காக 879 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன், 2017ஆம் ஆண்டில் அது 929 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன கங்கையின் நீரைப் பாதுகாப்பதற்கு தீவிரமாக பங்களிப்பு வழங்க வேண்டுமென கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்