தேர்தல் தோல்வியும் ரணில் சொல்லும் காரணங்களும்

by Bella Dalima 22-11-2019 | 8:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் தௌிவுபடுத்தினார். தேர்தல் கால பொறிமுறைகளை முடக்கியதாக தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் வடக்கு, கிழக்கு வாக்குகளைப் பெறும் பொறுப்பை தாம் ஏற்றதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனினும், துரதிர்ஷ்டவசமாக ஐந்து மாகாணங்களில் வாக்குகள் குறைவடைந்தமையே தோல்விக்குக் காரணம் என அவர் தௌிவுபடுத்தினார். கட்சிக்கு சிங்கள பௌத்த அடிப்படை இல்லாமற்போனமையும் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து தௌிவடைந்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னோக்கி செல்ல முடியும் என குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்தித்து புதிய தலைவர்களை முன்நிறுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார். இந்த வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு, புதிய ஐக்கிய தேசியக் கட்சியாக முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இதேவேளை, சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்கு மக்கள் சென்றபோது மூடப்பட்டிருந்த கட்சித் தலைமையகமான சிறிகொத்தவிற்கு, அகிலவிராஜ் மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோருடன் ரணில் விக்ரமசிங்க இன்று சென்றிருந்தார். கட்சியில் சிங்கள பௌத்த வாக்குகள் இன்மையே ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு காரணம் என ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சிங்கள பௌத்த மக்களிடையே ஐக்கிய தேசியக் கட்சியை தூரமாக்குவதற்கு செயற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் பின்புலத்தில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக சிங்கள ராவய தேசிய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தலைவராக இருந்த போது சிங்கள பௌத்தர்களுக்கு கொடுமைகள் இடம்பெற்று, தேரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தேரர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதே, இந்த ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிங்கள பௌத்தர்கள் விலகிச்சென்றார்கள் என அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைமையகமான சிறிகொத்தவின் பொறிமுறை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறுவதை, தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் கால பொறிமுறைகள் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், அப்பொறுப்பு வேறொருவரிடம் இருந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் குரல் தனியாக ஒலித்து, நாடு முழுவதும் சென்றமையாலேயே 55 இலட்சம் வாக்குகள் அவருக்கு கிடைத்ததாகவும் கட்சியின் ஒரு சிலர் மாத்திரமே அவருக்காக உழைத்ததாகவும் ஹரின் பெர்னாண்டோ விளக்கியுள்ளார். இதேவேளை, கட்சியின் நிதி நடவடிக்கை சிறிகொத்தவில் இடம்பெறவில்லை என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவ்வாறாயின் தேர்தலுக்கான நிதிக்கு என்ன நேர்ந்தது? அந்நிதியை நிர்வகித்தது யார், இணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது யார்? வடக்கு, கிழக்கில் மாத்திரம் தேர்தல் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டதாகவும் அங்கு வாக்குகளை அதிகரிப்பதற்கு தம்மால் முடிந்ததாகவும் பெருமிதம் கொள்ளும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் திடீர் உயிரிழப்பினால் 1993ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கவின் திடீர் உயிரிழப்பை அடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பமிருந்தும் ரணில் விக்ரமசிங்க அதனை தவிர்த்துக்கொண்டார். அன்றிலிருந்து ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் பெரும் பின்னடைவையே எதிர்நோக்கியது. 1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்ரமசிங்கவிற்கு 42.71 வீதமான வாக்குகளே கிடைத்தன. அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வீதம் 40.22 வீதமான வீழ்ச்சியடைந்தது. 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 45.62 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. எனினும், பெற்றுக்கொண்ட ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவினால் முடியாமற்போனது. 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் 37.83 வீதமான வாக்குகளையே பெற முடிந்தது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 48.43 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்வியே எஞ்சியது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளரைக் களமிறக்குவதைத் தவிர்த்த ரணில் விக்ரமசிங்க, பொது வேட்பாளர் எனக்கூறி சரத் பொன்சேகாவை களமிறக்கினார். எனினும், 40.15 வீதமான வாக்குகளே கிடைக்க, அந்தத் தேர்தலிலும் தோல்வியே ஏற்பட்டது. இதனையடுத்து, 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணில் விக்ரமசிங்க தோல்வியையே பெற்றுக்கொடுத்தார். அந்தத் தேர்தலில் கட்சியின் வாக்கு வீதம் 29.34 ஆக வீழ்ச்சியடைந்தது. 2015ஆம் ஆண்டில் விக்ரமசிங்கவின் ஆதரவு கிடைத்த மைத்திரிபால சிறிசேன, 51.28 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற போதிலும், அது ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியல்ல என்பதை கட்சி ஆதரவாளர்கள் நன்கு அறிவார்கள். நாட்டில் நிலவிய அரசியல் நிலைமையில், நல்லாட்சிக்காக ஒன்றிணைந்தவர்களின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றியடைய முடிந்தது. எனினும், 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 45.66 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்ற முடிந்த போதிலும், தனித்து ஆட்சியமைப்பதற்கு அது போதுமானதாக இருக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வீதம் 32.61 வீதம் வரை வீழ்ச்சியடைந்தது. ஐக்கிய தேசியக் கட்சி ஆளுந்தரப்பாக செயற்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் கட்சிக்கு இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டது. கட்சி இவ்வாறான பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில், இம்முறை போட்டியிட்ட சஜித் பிரேமதாசவினால் 41.99 வீதமான வாக்குகளைப் பெற்று, கட்சியின் வாக்கு வீதத்தை அதிகரிக்க முடிந்தது. அவ்வாறிருக்க, கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் வெற்றியை நோக்கிச் செல்வதற்கு இதே தலைமைத்துவம் உதவுமா?