D.A. ராஜபக்ஸ அருங்காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுவிப்பு

by Staff Writer 21-11-2019 | 10:31 AM
Colombo (News 1st) D.A. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கத்தின் 3 கோடியே 39 இலட்சம் ரூபாவைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்களில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை விடுவிப்பதற்கு மேல் மாகாண மூவரடங்கிய நிரந்தர நீதிபதிகள் குழாம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் பொறுப்பிலிருக்கும் அவரது கடவுச்சீட்டை கையளிக்குமாறும் மேல்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் முதலாவது பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஸவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அனைத்து பிணையாளர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், அவர்கள் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ள ரொக்கப் பிணையையும் மீள வழங்குமாறு உத்தரவிட்டுள்ளனர். அந்த வழக்கின் ஏனைய 6 பிரதிவாதிகள் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றத்தை தௌிவூட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரட்ணம் ஆகியோர் உள்ளடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்திற்கு அமைய, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் 25/1 ஆவது சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தல் அல்லது விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லல் ஆகியவற்றுக்கு சட்டரீதியான இயலுமை இல்லாத காரணத்தினால், பிரதிவாதியை அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிடுக்குமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.