சஜித் பிரேமதாச மக்களை சந்தித்தார்

சஜித் பிரேமதாசவை சந்திக்க சென்ற மக்கள்; சிறிகொத்த கதவு மூடப்பட்டது

by Staff Writer 21-11-2019 | 8:11 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் வொக்ஸ்ஹோல் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்திற்கு சஜித் பிரேமதாச இன்று சென்று, அங்கு மக்களை சந்தித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலை​மையகமான சிறிகொத்தவில் மக்களை சந்திப்பதற்கே சஜித் பிரேமதாச முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், இன்று காலை அங்கு சென்ற மக்கள் சிறிகொத்த தலைமையகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த செயற்பாட்டிற்கு மக்கள் கடும் கண்டனங்களை வௌியிட்டனர். சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பை அடுத்து, தேர்தல் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில், சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் தாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அஷோக்க அபேசிங்க குறிப்பிட்டார். சஜித் வந்தால் மாத்திரமே அரசாங்கம் மற்றும் பங்காளிக் கட்சிகளின் ஆசனங்கள் 100 என்ற எண்ணிக்கையை அடைய முடியும் என ஹிருணிக்கா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.