by Staff Writer 21-11-2019 | 8:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான விடயம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரிடம் தொடுக்கப்பட்ட வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவிற்கு பலத்த கரிசனை உள்ளதாகவும் அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்திற்கும் இந்தியா ஆலோசனை வழங்கும் என தான் ஆழமாக நம்புவதாக சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புவதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.