முதலாவது விஜயமாக இந்தியா பயணிக்கிறார் ஜனாதிபதி

முதலாவது விஜயமாக இந்தியா பயணிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 20-11-2019 | 5:48 PM
Colombo (News 1st) எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார். அழைப்பு விடுப்பதற்காக திடீர் விஜயம் மேற்கொண்ட இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்தார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்பதாக தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதிவேற்றியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தல், வலய பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சமாதானம், அபிவிருத்தி, சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒத்துழைப்புகள் குறித்த பிரதமரின் செய்தியை இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கியதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் உறுதிப்படுத்தப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேவேளை, கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தார்.