தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு; மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்

by Staff Writer 20-11-2019 | 9:47 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே பிரதீப் திலங்க தேர வரவேற்றார். அரச தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைய, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவது வழமையாகும். ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், புதிய ஜனாதிபதி தனது வருகையை பதிவு செய்யும் வகையில் விசேட விருந்தினர் பதிவேட்டில் குறிப்பொன்றை எழுதினார். தலதா மாளிகையை விட்டு வௌியேறிய ஜனாதிபதிக்கு, அங்கு கூடியிருந்த மக்கள் அமோக வரவேற்பளித்தனர். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி பின்னர் மல்வத்து மகா விகாரையில் மல்வத்து மகாநாயக்க தேரர் உள்ளிட்ட தேரர்களிடம் ஆசிபெற்றார் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கிய மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் நினைவுச்சின்னத்தினை வழங்கினர். அதனையடுத்து, ஜனாதிபதி அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்றார். அஸ்கிரிய மகா விகாரையில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றுக்கொண்டார். மெனிக்ஹின்ன - ஹூரீகடுவ வித்யாசாகர பிரிவெனாவிற்கும் ஜனாதிபதி சென்றிருந்தார்.