பூஜித், ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 19-11-2019 | 1:13 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்டனர். ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் புஜித் ஜயசுந்தர ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களுடன் குறித்த 2 சந்தேகநபர்கள் தொலைபேசியூடாக தொடர்புகளை பேணவில்லை என்பது, தொலைபேசி அறிக்கைகளூடாக தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றில் அறிவித்துள்ளது. வழக்கின் முதலாவது சந்தேகநபரான ஹேமசிறி பெர்னாண்டோவின் பெயரில், எந்தவொரு அரச மற்றும் தனியார் வங்கியிலும் வங்கிக்கணக்கு பேணப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டாவது சந்தேகநபரான பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் 5 வங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளதாக மன்றுக்கு திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து மன்றுக்கு அறியத்தருமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.