பாராளுமன்ற அடுத்தகட்ட செயற்பாடு குறித்து சபாநாயகர்

பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் கலந்துரையாடல்

by Staff Writer 19-11-2019 | 2:19 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துரையாடியுள்ளார். நாட்டின் நிர்வாகம் தொடர்பில், தௌிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளதால், அதன்பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் நிலைப்பாடாக அமைந்துள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் 3 மாற்று வழிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  1. அரசியலமைப்பின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்துதல்
  2. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக 3/2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துதல்
  3. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தமது விருப்பத்தின் பேரில் பதவி விலகுவதுடன், பொதுத் தேர்தல் நடைபெறும் வரை, இடைக்கால அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதிக்கு இடமளித்தல்
கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்ட குறித்த விடயங்கள் தொடர்பில், இந்த வாரத்திற்குள் கட்சித் தலைவர்கள் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, சபாநாயகருக்கு அறிவித்த உடனே, இறுதித் தீர்மானத்தை எடுப்பதாக பாராளுமன்றத்தின் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டவுள்ளார்.