புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்

by Staff Writer 18-11-2019 | 2:50 PM
Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) பதவியேற்றுள்ளார். இந்த நிகழ்வு இன்று அநுராதபுரம் ருவன்வெலிசாய மகாதூபிக்கு அருகில் இடம்பெற்றது. பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதியாக பதவிப்பிரணமானம் செய்து கொண்டதன் பின்னர், புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம். உலக அரசியலில், பல்வேறு தரப்பினருக்கிடையில் இடையிலான அதிகார பலம் எமக்கு அவசயமில்லை. எமது நாட்டுடன் இணைந்து செயற்படும் போது நாட்டின் ஐக்கியம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நாம் அனைத்து நாடுகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம். சட்டவாட்சியை மதிப்பளிக்கும், சமூக நியாயத்தை பாதுகாக்கும், ஊழலற்ற, மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் அரச பொறிமுறை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் உறுதியளிக்கின்றேன். எமது நாளாந்த வாழ்க்கையில் சட்டத்திற்கு மதிப்பளிக்கும், ஒழுக்கத்தை பேணும் வகையிலான சமூகத்தை கட்டியெழுப்பவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். பாரிய நடவடிக்கைகளை குறுகிய நாட்களில் செய்து முடிக்க வேண்டும், நான் இந்த நாட்டின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி, நாட்டின் சுபீட்சத்திற்காக நிறைவேற்றத்திகாரத்தை பயன்படுத்த நான் ஒருபோதும் பின்நிற்க மாட்டேன். வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, மக்களினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆணையை செயற்படுத்துவதனூடாக, எனது கொள்கைகளின் பிரகாரம் புதிய நாடொன்றை கட்டியெழுப்புவேன்
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸ 6,924,255 வாக்குகளை பெற்றுள்ளார். அது அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 52.25 வீதமாகும். 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஏனைய செய்திகள்