புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார் - அமெரிக்கத் தூதரகம்

by Staff Writer 18-11-2019 | 6:48 PM
Colombo (News 1st) இலங்கையில் நடைபெற்ற ஜனநாயக ரீதியிலான ஜனாதிபதித் தேர்தலுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வௌிப்படையானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம், இலங்கை தனது குடியரசின் வலிமை மற்றும் மீள் எழுச்சியை தொடர்ந்தும் வௌிப்படுத்தி வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமைதியான தேர்தலை ஊக்குவித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளை தாம் பாராட்டுவதாகவும் அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயரிய நல்லாட்சி, விரிவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகளின் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக, நாட்டின் இறையாண்மைக்கு ஒத்துழைப்பு வழங்குவதிலும் அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய இந்து - பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாப்பதிலும் புதிய ஜனாதிபதி மற்றும் அனைத்து இலங்கை மக்களுடன் தமது பணியை தொடர்வதற்கு தயாராக இருப்பதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்