கோட்டாபய ராஜபக்ஸ நாளை காலை பதவிப்பிரமாணம்

by Staff Writer 17-11-2019 | 8:49 PM
Colombo (News 1st) அனுராதபுரம் - ருவன்வெலி மகா தூபிக்கு அருகில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ நாளை (18) காலை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்ட நேற்றிரவும் இன்று காலையும் மிரிஹானவிலுள்ள தனது வீட்டிலேயே கோட்டாபய ராஜபக்ஸ தங்கியிருந்தார். கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இன்று அதிகாலை முதல் மிரிஹான வீட்டிற்கு வருகை தந்த வண்ணமிருந்தனர். பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ முடிவுகள் வௌியிடப்பட்ட தருணத்தில், தங்காலை - கால்டன் இல்லத்தில் இருந்தார். மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று காலை முதல் கால்டன் இல்லத்திற்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு நோக்கி மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் புறப்பட்டார். 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் பலாடுவயில் பிறந்த நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸ, ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய கிராமத்தில் வளர்ந்தார். அவரின் தந்தையாரான டீ.ஏ.ராஜபக்ஸவும் நாட்டின் அரசியலில் விசேட தடங்களை பதித்த ஒருவராவார் மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஸவின் மூத்த சகோதரர்களாவர். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான கோட்டாபய ராஜபக்ஸ, 1992 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பட்டப்படித்தை பூர்த்தி செய்தார். இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கோட்டாபய ராஜபக்ஸ 2005ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதில் கோட்டாபய ராஜபக்ஸ பாரிய பங்காற்றினார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி LTTE-இனர் நடத்திய தாக்குதலுக்கும் அவர் இலக்கானார். 2009ஆம் ஆண்டில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து, நகர அபிவிருத்தியூடாக கொழும்பு மாநகரில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். 2015 ஆம் ஆண்டு முதல் வியத் மக அமைப்பிற்கு தலைமைத்துவம் வழங்கிய கோட்டாபய ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பெயரிடப்பட்டார். 98 நாள் போராட்டத்தின் பின்னர், இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ மக்கள் ஆணையைப் பெற்றுள்ளார்.