மக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது

மக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது

by Staff Writer 15-11-2019 | 4:09 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான சப்சா எனப்படும் தெற்காசிய வர்த்தக திறன் விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று (14) நடைபெற்றது. கிராம மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் நிறுவனமொன்றின் பொறுப்பை அதியுச்சமாக நிறைவேற்றியமைக்கான சார்க் விருது இம்முறை மக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு வழங்கப்பட்டது. தெற்காசிய புரிந்துணர்வு மாநாடு, சப்சா 2019 விருது வழங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. தெற்காசிய நாடுகளில் அரசியல், சமூக, பொருளாதார, நிதி மற்றும் நிறுவனம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, மக்கள் சக்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த பல வருடங்களாக மக்கள் சக்தி செயற்றிட்டம், நாட்டின் கிராம மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல திட்டங்களை முன்னெடுத்தது. இதனை பாராட்டும் வகையில், சார்க் நாடுகள் மத்தியில் சிறந்த சமூகப் பணித் திட்டமாக மக்கள் சக்திக்கு விருது வழங்கப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இந்த விருது வழங்கல் விழாவில் சார்க் நாடுகளின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த விருது வழங்கல் விழா கடந்த வருடம் பங்களாதேஷில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.