by Bella Dalima 15-11-2019 | 8:05 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இன்னும் 11 மணித்தியாலத்திற்கும் குறைந்த காலப்பகுதியே உள்ளது.
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வழமையாக வாக்களிக்கும் நடவடிக்கைகள் மாலை 4 மணிக்கு நிறைவடைகின்ற நிலையில், இம்முறை மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை நள்ளிரவிற்கு முன்னதாக வழங்க முடியும் எனவும் பெரும்பாலும் அது இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவாக இருக்கக்கூடும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
தொகுதிவாரியான முடிவுகளின் முதலாவது முடிவை அதிகாலை 2 மணிக்காவது வழங்க முடியும் என்றும் காலை 8 மணியாகும்போது அரைவாசிக்கும் மேல் முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.