ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி: 12,845 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி: 12,845 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்குப்பதிவு

எழுத்தாளர் Bella Dalima

15 Nov, 2019 | 8:48 pm

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்காக 12,845 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை அனுப்பும் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளன.

வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 3 இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் தலைநகரும் வணிக நகருமான கொழும்பு மாவட்டத்தில் 15 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன.

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஆகியவற்றில் இருந்து, 1175 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை இடம்பெற்றன.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தில் இருந்து அதிகாரிகள் புறப்பட்டுச்சென்றதுடன், வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களும் கொண்டு செல்லப்பட்டன.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவு வாக்காளர்கள் உள்ள கம்பஹா மாவட்டத்தில், 13 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன.

பத்தலகெதர – சியனெ தேசிய விஞ்ஞான பீடத்தில் இருந்து 1,184 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகளுடன் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டமான களுத்துறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று காலை கொண்டு செல்லப்பட்டன.

வடமேல் மாகாணத்தின், குருணாகல் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று முற்பகல் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் புனித என்டூ மத்திய கல்லூரியில் இருந்து புத்தளம் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தில் 411 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று முற்பகல் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

பொல்கொல்லை தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் மகாவெலி கல்வியற்கல்லூரி என்பவற்றில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாத்தளை மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு மாத்தளை – கிறிஸ்துவ வித்தியாலயத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் இருந்து வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தேர்தல் தொகுதியாக நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதி அமைகின்றது.

அங்கு 3,25,030 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் இம்முறை தேர்தலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் 7 தேர்தல் தொகுதிகள் உள்ளன.

அநுராதபுரம் மத்திய கல்லூரியில் இருந்து குறித்த தொகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகளுடன் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புலதிசிபுர தேசிய கல்வியற்கல்லூரியிலிருந்து பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பொலன்னறுவை மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகள் உள்ளன.

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. காலி மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகள் உள்ளன.

இன்று காலை முதல் காலி அலோசியஸ் கல்லூரி மற்றும் காலி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய பிரதான தேர்தல் அலுவலகங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதானபத்திரன கூறினார்.

மாத்தறை மாவட்டத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் மாத்தறை சுஜாத்தா கல்லூரியில் இருந்து சனத் ஜயசூரிய விளையாட்டரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அவை விநியோகிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இருந்து முன்னெடுக்கப்பட்டன.

திகாமடுல்ல மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் அம்பாறை – ஹாடி தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் மற்றைய மாவட்டமான திருகோணமலையில் மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன.

இவற்றுக்கான தேர்தல் பெட்டிகள், திருகோணமலை மிஹிதுபுர தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து அனுப்பப்பட்டன.

வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கான அனைத்து வாக்குப்பெட்டிகளும், வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து, யாழ். மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டன.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் ஊர்காவற்றுறைக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்