ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் புகழாரம்

மைத்திரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரியான அரச தலைவர் - மகாசங்கத்தினர்

by Staff Writer 14-11-2019 | 10:25 AM
Colombo (News 1st) தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் முன்மாதிரியான அரச தலைவர் என மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தைத் தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோசனை சபை, பௌத்த புலமைத்துவ சபை, அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தி அதனைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, நாட்டின் பௌத்த சாசனத்திற்காக ஜனாதிபதி மேற்கொண்ட ஒரு முக்கியமான பணி என மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் பிரிவெனா கல்வியை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்னெப்போதும் இல்லாத வகையில் பல பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மகா சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்காக அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் பௌத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.