இஸ்ரேல் - காஸா எல்லைப் போரில் 26 பலஸ்தீனர்கள் பலி

தொடரும் இஸ்ரேல் - காஸா எல்லைப் போர் ; 26 பலஸ்தீனர்கள் பலி

by Staff Writer 14-11-2019 | 8:32 AM
Colombo (News 1st) இஸ்ரேல் - காஸா எல்லையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரை 26 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதாக காஸா - ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதல்களில் காயமடைந்த 63 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் காஸா - ஹமாஸ் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. காஸா பிராந்தியத்திலுள்ள பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவின் மிகமுக்கிய தலைவரான பஹா அபு அல் அட்டா (Baha Abu Al-Ata), இஸ்ரேலிய வான்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அவர் இருந்த வீட்டை இஸ்ரேலின் ஏவுகணை ஒன்று தாக்கியதில் அவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக குறித்த ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. அல் அட்டா வெடிகுண்டு போன்றவரெனவும் உடனடியாக பயங்கரவாதத் தாக்குதல்களை அவரே திட்டமிடுபவரெனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இதற்குத் தக்க பதிலடி வழங்கப்படுமென பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழு அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.