தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடனான விசேட செவ்வி

by Staff Writer 14-11-2019 | 9:28 PM
Colombo (News 1st) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு விசேட செவ்வியொன்றை வழங்கினார். கேள்வி: தேர்தலின் போது கூறப்படும் வார்த்தையொன்றுள்ளது. மன அழுத்தம். அவ்வாறு ஏதேனும் உள்ளதா? மஹிந்த தேசப்பிரிய: அவ்வாறொன்றும் இல்லை. வழமை போன்று மகிழ்ச்சியாகவும் வேலைப்பளுவுடனும் உள்ளேன். இந்த வாரம் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட சில தேவையற்ற செயற்பாடுகள் எமக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன. வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக மத அனுஷ்டானங்களை முன்னெடுக்கும் செயற்பாட்டை எவ்வாறு தடுப்பது என்று சிந்தித்து சோர்வடைந்துள்ளோம். கேள்வி: கடந்த சில தினங்களாக பிரஜாவுரிமை தொடர்பில் பேசப்படுகின்றது. உங்களின் குரல் பதிவுகளும் சில இடங்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அது தொடர்பில்? மஹிந்த தேசப்பிரிய: அமைதி காலத்தில் நான் கூறும் பதிலின் ஊடாக, அது ஊக்குவிப்பாக அல்லது பாதிப்பாக அமையலாம். இதற்கு பதிலளிப்பதை தவிர்ப்பது நல்லது என நாம் எண்ணுகின்றோம். கேள்வி: நீங்கள் பதில் வழங்காத போதிலும், உங்களின் குரல் பதிவொன்று ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. அது சரி என நீங்கள் கருதுகின்றீர்களா? மஹிந்த தேசப்பிரிய: அதனை பாரிய பிரச்சினையாக நான் கருதவில்லை. ஏனெனில், நான் கூறிய விடயத்தை மற்றுமொரு இடத்தில் மீண்டும் ஒருமுறை கூற முடியும். நான் இரகசியமொன்றை கூறியிருந்தாலே எனக்கு பிரச்சினையாக அமையும். நான் இரகசியமொன்றை கூறாதமையால், அது தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. கேள்வி: தேர்தலின் போது பிரஜாவுரிமை தொடர்பில் நீங்கள் கருத்திற்கொள்வீர்களா? மஹிந்த தேசப்பிரிய: வேட்பாளர் ஒருவரின் சத்தியக்கடதாசிக்கு அமையே நாம் செயற்படுகின்றோம். வேட்புமனுவில் வினவப்பட்டுள்ள விடயங்களைத் தவிர, வேறு எந்தவொரு விடயமும் எமக்கு தேவையற்றது. வேட்புமனுவை நிராகரிப்பதற்கு இந்த விடயங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும் என சட்டத்தில் காணப்பட்டால் அது குறித்து மாத்திரமே கவனம் செலுத்துவோம். ஆகவே, நாம் எதனையும் பார்க்காமல் எடுத்தோம். கடையில் பொருட்களை வாங்கச் சென்றாலும் இதை விட பார்ப்பார்கள் அல்லவா என கேட்கின்றனர். அது எமது பொறுப்பல்ல. விற்பதற்கு இருக்கின்றதா இல்லையா என்ற தகவலையே நாம் பரிமாறுகின்றோம். அதனை கொள்வனவு செய்வது மக்களின் பொறுப்பாகும். கேள்வி: நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வந்து, போலித் தகவல்களை வழங்கினால் ஆணைக்குழு என்ன செய்யும்? மஹிந்த தேசப்பிரிய: போலித் தகவல்கள் தொடர்பில் நாம் ஆராய்வோம். தகவல் வழங்காவிட்டால் அது தொடர்பில் ஆராய வேண்டியது எமது வேலையல்ல. எவரேனும் முறைப்பாடு செய்ய வேண்டும். கேள்வி: நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். நீதிமன்றத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டால் அது பிறிதொரு விடயம். அதனுடன் உங்களுக்கு தொடர்பில்லையா? மஹிந்த தேசப்பிரிய: எமது பொறுப்பு என்னவென்றால், வேட்புமனு கோரி தேர்தலை நடத்தி முடிவுகளை வௌியிடுவதேயாகும். ஏனையவற்றை அதனுடன் தொடர்புடையவர்களே செய்ய வேண்டும். ஆணைக்குழு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மாத்திரமே நிறைவேற்றும். ஆணைக்குழுவால் விசாரணைகள் எதனையும் நடத்த முடியாது.

ஏனைய செய்திகள்