11 பேர் கடத்தல்: கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கை

11 இளைஞர்கள் கடத்தல்: குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு

by Staff Writer 13-11-2019 | 3:57 PM
Colombo (News 1st) கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 6 சந்தர்ப்பங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா ஏற்கனவே பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் ரத்துபஸ்வெல துப்பாக்கி பிரயோகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை இராணுவத் தளபதிக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.