by Bella Dalima 13-11-2019 | 4:14 PM
நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வந்த இந்திய தம்பதி தினேஷ்வர் பத்திதாட் (வயது 33), டோனி டோஜோய் (27) ஆகியோருக்கு கடந்த ஜூலை மாதம் தான் திருமணம் நடந்தது. தினேஷ்வர் அங்குள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார்.
டோஜோய், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை. அவரின் படம் வெளியானால் முதல் நாளிலேயே பார்த்துவிடுவார். அது மட்டுமின்றி எப்போதும் அவர் நடித்த படங்களின் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருப்பார். தனது மனைவி தன்னை விட நடிகர் ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்பியதால் அவர் மீது தினேஷ்வருக்கு கோபமும் வெறுப்பும் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது ஹிருத்திக் ரோஷன் விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்வர் தனது மனைவி டோஜோயை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
பின்னர் அவர் டோஜோயின் மூத்த சகோதரியின் செல்போனுக்கு “உங்கள் தங்கை டோஜோயை கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை, கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினார். அதனை தொடர்ந்து வீட்டுக்கு எதிரே உள்ள மரத்தில் தினேஷ்வர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டோஜோயின் சகோதரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தினேஷ்வர் மற்றும் டோஜோயின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.