யார் போலியாக செயற்பட்டாலும் உண்மை வெற்றி பெறும்: சஜித் பிரேமதாச தெரிவிப்பு

by Bella Dalima 13-11-2019 | 8:58 PM
Colombo (News 1st) அச்சுறுத்தல், அடக்குமுறைக்கு எதிராக 16 ஆம் திகதி நீதி, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியன வெற்றிபெறும் எனவும் மீண்டும் வௌ்ளை வேன் கலாசாரத்தை செயற்படுத்த நாடு தயாராகவில்லை எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையில் தெரிவித்தார். கோட்டாபயவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் சிலர் பேசுகின்ற போதும், அது தொடர்பில் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அவருடன் போட்டியிடவே தாம் விரும்புவதாகவும் சஜித் பிரேமதாச கூறினார். தனது எதிராளியின் அனைத்து ஆவணங்களும் பொய் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, யார் போலியாக செயற்பட்டாலும் உண்மை வெற்றி பெறும் என உறுதியாகக் கூறினார். இதேவேளை, மொனராகலையில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலும் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார். சஜித் பிரேமதாசவின் வெற்றியை முன்னிட்டு, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் மொனராகலையில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேனவின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் பலர் புதிய ஜனநாயக முன்னணியுடன் இதன்போது இணைந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தாமரைக் கோபுரத்தின் நிர்மாணத்திற்கான நிதி தொடர்பில் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, அதனை நிர்மாணிக்க நிதியை செலவிடுவது சிறந்ததா, பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், காலணிகளை வழங்குவது சிறந்ததா என கேள்வி எழுப்பினார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் நேற்றைய நாளுக்கான இறுதிக்கூட்டம் கண்டியில் இடம்பெற்றது. கண்டி மஹியாவ பிரதேசத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட சிலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, புதிய முதலீட்டாளர்கள் மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களை தொடர்புபடுத்தி, வீழ்ச்சியடைந்துள்ள நிதி நிறுவனங்களைக் கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புச் செய்வதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.