கரன்னாகொடவை ஆஜர்படுத்த அறிவிக்குமாறு கோரிக்கை

கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அறிவிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 13-11-2019 | 5:39 PM
Colombo (News 1st) 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டதன் பின்னர் அவர்களை கொலை செய்ய உதவி புரிந்தமை, சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் படி அறிவித்தல் பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் இந்த வழக்கின் 16 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வசந்த கரன்னாகொடவை கைது செய்வதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு அமைய அவரை கைது செய்வதை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் இந்த தடையுத்தரவிற்கமைய, வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்காமையாலும் நீதவான் நீதிமன்றத்தின் விசாரணைகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதாலும் தாம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக பிரதி சொலிசிட்டர் மன்றுக்கு அறிவித்தார். சந்தேகநபருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பித்து, நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைய பிணை வழங்குவதற்கான அதிகாரம் இல்லையெனவும் அவரை விளக்கமறியலில் வைத்தால் அது உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளையை மீறும் செயற்பாடாக அமையும் என்பதால், சட்ட மா அதிபர் சார்பான கோரிக்கையை நிராகரிப்பதாக நீதவான் ரங்க திசாநாயக்க அறிவித்துள்ளார். இதேவேளை இந்த வழக்கின் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கடற்படை உறுப்பினர்களான அளுத்கெதர உபுல் பண்டார, லக்ஷ்மன் உதயகுமார மற்றும் தம்மிக்க இஹலகெதர தர்மதாச ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பை வழங்குவதற்கு சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்ட ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.