அன்னத்திற்கு ஆதரவளிக்க காரணம் என்ன: சந்திரிக்கா விளக்கம்

அன்னத்திற்கு ஆதரவளிக்க காரணம் என்ன: சந்திரிக்கா விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

13 Nov, 2019 | 9:34 pm

Colombo (News 1st) அன்னச் சின்னத்திற்கு தாம் ஆதரவளிப்பது ஏன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று அம்பாறையில் விளக்கமளித்தார்.

தமது கட்சியின் எண்ணக்கருவை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதாலேயே 2015 ஆம் ஆண்டு கூட்டமைப்பொன்றை உருவாக்கியதாக சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டார்.

புத்தபகவான் கூறியதைப் போல, எந்தவொரு மனிதரையும் சீர்செய்ய முடியும் என நம்பி, ஒருமித்த கருத்துடன் செயற்பட்டால் பிரச்சினை இல்லை என தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

இம்முறையும் அவ்வாறானதொரு கூட்டமைப்பினை தாம் உருவாக்கியுள்ளதாகவும், அந்த கூட்டமைப்பிற்கே வாக்களிக்குமாறு கோருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லவெனவும் சந்திரிக்கா குமாரதுங்க விளக்கமளித்தார்.

இருவரதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் அவதானிக்கும் போது, கோட்டாபய ராஜபக்ஸவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

எமது பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பெயர் தற்போது தயாசிறி அல்ல. ரிலாசிறி, குரங்கைப்போன்று 7 தடவைகள் கட்சி தாவியுள்ளார். அவரைப் போன்று தாவும் மற்றுமொருவர் வசந்த சேனாநாயக்க. உன்னத இலங்கையரான டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்ளுப்பேரன். அந்த கட்சியை ஆதரிக்காவிட்டாலும் அவரை நாம் மதிக்கின்றோம். கோட்டாபய பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு பாரிய குழுவொன்றுடன் அவர் வந்துள்ளார். அவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கோபப்பட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார். இதுவே அவரின் ஆணவம். நான் அவதானித்த வகையில், சஜித் பிரேமதாச அவ்வாறு இல்லை. அவர் அறியாத விடயங்கள் இருக்குமாயின், புத்திஜீவிகளிடம் அமைதியாகக் கேட்டு செயற்படத் தயாராகவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்