வேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் தம்மிடம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

by Bella Dalima 12-11-2019 | 8:17 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய தரப்பினர் கூறுகின்றனர். ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் நேற்று முன்தினம் (10) ஊடகங்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். எவ்வாறாயினும், BBC சிங்கள சேவையுடனான நேர்காணலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவை நிராகரிப்பதற்கான காரணங்கள் குறித்து மாத்திரமே தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியது. சிறைத்தண்டனை அனுபவித்துள்ளாரா, தகைமையீனத்திற்கு உட்பட்டுள்ளாரா, அரசாங்கத்துடன் ஒப்பந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளாரா, பிரஜாவுரிமை தொடர்பில் பிரச்சினையுள்ளதா ஆகிய விடயங்கள் குறித்து எந்தவொரு ஆவணத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரவில்லை. அது குறித்து கவனம் செலுத்தவும் இல்லை. தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு விடயத்தையே முன்னெடுத்தது. நான் எந்தவொரு தகைமையீனத்திற்கும் உட்படவில்லை, போட்டியிட விரும்புகின்றேன் என வேட்பு மனு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர் கையொப்பமிட வேண்டும். எந்தவொரு தகைமையீனத்திற்கும் உட்படவில்லை எனக்கூறி நாம் தனியாக சத்தியப்பிரமாணத்தைப் பெற்றுக்கொண்டோம். ஆணைக்குழுவினால் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. எவரேனும் ஆட்சேபனை தெரிவித்தால் அது குறித்து எம்மால் செயற்பட முடியும். எந்தவொரு ஆவணத்தையும் நாம் உத்தியோகப்பூர்வமாகக் கோரியிருக்கவில்லை. குறைந்தபட்சம் அடையாள அட்டையின் பிரதியைக்கூட நாம் கோரவில்லை. எந்தவொரு வேட்பாளருக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ அமையும் வகையிலான பதிலை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்க முடியாது.
என மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். இதேவேளை, பிரஜாவுரிமையைக் கருத்திற்கொள்ளாமல், தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமளித்தால் எதிர்காலத்தில் விரும்பிய எவராலும் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடிய நிலை உருவாகும் எனவும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பதற்கு சிந்திப்பவர்கள் இது குறித்து கவனம் செலுத்தியே தமது வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.