கோட்டாபயவின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இங்குருவத்தே சுமங்கல தேரர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

கோட்டாபயவின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இங்குருவத்தே சுமங்கல தேரர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2019 | 7:13 pm

Colombo (News 1st) கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் ஆரம்பித்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, சுதந்திர சதுக்கத்தில் தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

தேரருக்கு ஆதரவளித்து அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் மஹில் பண்டார உள்ளிட்ட இளம் செயற்பாட்டாளர்களும் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, உண்ணாவிரதம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு இன்று முற்பகல் முகத்தை மறைத்துக்கொண்டு ஒருவர் சென்றிருந்தார்.

சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அந்நபர் தேரரிடம் கோரினார்.

இதேவேளை, தேரரின் உடல் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக தேசிய மக்கள் சபையின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா அங்கு சென்றிருந்தார்.

சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு ஜனநாயகத்திற்கான இளையோர் அமைப்பு இன்று மாலை சென்றது.

இவர்கள் தெய்வேந்திரமுனையிலிருந்து நடைபயணமாக வந்திருந்தனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இன்று மாலை சுதந்திர சதுக்கத்திற்கு சென்று, தேரரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்