by Staff Writer 12-11-2019 | 7:59 AM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
இதற்கமைய தொடர் 3 - 0 எனும் ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வசமானது.
இந்தியாவின் லக்னவ்வில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 28.3 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
ஹஷரடுல்லாஹ் ஷஷாய் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
அஷ்கர் ஆப்கான் மற்றும் மொஹமட் நபி ஜோடி ஆறாம் விக்கெட்காக 127 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தது.
அஷ்கர் ஆப்கான் 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 86 ஓட்டங்களையும் மொஹமட் நபி 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் கீமோ போல் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதலிரண்டு விக்கெட்களும் 4 ஓட்டங்களுக்கு வீழ்ந்தன.
ஆனாலும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப் சதமடித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பிரென்டன் கிங் 39 ஓட்டங்களையும் அணித்தலைவர் கிரான் பொலார்ட் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஷாய் ஹோப் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 109 ஓட்டங்களையும் ரொஷ்டன் ச்சேஸ் 42 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.
இது 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் தொடரொன்றை மேற்கிந்தியத் தீவுகள் அணி முழுமையாக கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.