அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2019 | 8:50 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் இன்றைய நாளுக்கான முதலாவது பரப்புரைக் கூட்டம் பொலன்னறுவை – கதுருவெல பகுதியில் நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு பரப்புரைக் கூட்டம் அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

நேற்றைய தினம் (11) புதிய ஜனநாயக முன்னணியின் 10 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றிருந்தன.

நீர்கொழும்பில் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில், தாம் தனியார்மயப்படுத்தலை விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதி எனவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தனியார்மயப்படுத்தும் முட்டாள்தனமான தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாகவும் திறமையுள்ள சிறந்த நபர்களை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு நியமிப்பதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்கள் வௌிநாட்டிற்கு விஜயம் செய்தால், நாட்டிற்கு பயன்தரும் விடயங்களை எடுத்து வர வேண்டும். இல்லாவிடின், மீண்டும் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை எனவும் நிபந்தனைகளின்றியே தான் வேட்பாளராக முன்நிற்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.

இதேவேளை, தெஹிவளையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அரசியல்வாதிகள் சிலர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்