வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு

வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Staff Writer 11-11-2019 | 7:23 PM
Colombo (News 1st) கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் 14 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 668 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வௌ்ளை வேனைப் பயன்படுத்தி 2008 ஆம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 6 சந்தர்ப்பங்களில், கொட்டாஞ்சேனை உள்ளிட்ட கொழும்பின் சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார். LTTE பயங்கரவாத சோதனை என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினூடாக, பயங்கரவாதத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடாத நிராயுதபானி சிவில் பிரஜைகள் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்பத்திரத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி கூறியுள்ளார். கடத்தப்பட்டவர்களிடம் கப்பம் கோர முயற்சித்தமை மற்றும் இறுதியில் கடத்தப்பட்ட 11 பேரையும் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் நேரடியாக பார்த்த மற்றும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளூடாக உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களுக்கு அமைய பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.